நகைக்கடன் தள்ளுபடி.. இன்னொரு சான்ஸ்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்கள் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை வரும் 7-ம் தேதி வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவாக நகைகள் அடகு வைத்து நகைக்கடன் பெற்ற அனைவரின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இதன் பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற உடன், நகைக்கடன் விவரங்களை ஆய்வு செய்த போது, பல மாவட்டங்களில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த சூழலில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிக்கு குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. இதை அடிப்படையாக வைத்து, நகைக் கடன் தள்ளுபடி பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் நகைக்கடன் பெற தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். இதையடுத்து, தகுதி பெற்றவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடி ரசீதும், நகைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 5 சவரனுக்கு குறைவாக நகைகள் அடகு வைத்து நகைக்கடன் பெற்ற அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி நகைக்கடன் பெற்றவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் கூறியுள்ளதாவது: ‘விருதுநகர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தள்ளுபடிக்கு தகுதி பெறாதவர்கள் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் அலுவலகங்களில் வரும் 7ம் தேதி வரை அளிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.