மோசடி வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன் கைது..!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எருமப்பட்டி பகுதியை சேர்ந்த வாசுதேவன் (65). விவசாயியான இவருடைய நான்கு ஏக்கர் நிலத்தின் மீது ரூபாய் ஒரு கோடி ரூபாய் பணம் கடன் கொடுப்பதாக கூறி 2020 ம் ஆண்டு சிலர், வாசுதேவனின் நிலத்தை கிரயம் செய்து கொண்டு , 22 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்து விட்டு , மீதி பணத்தை இது நாள் வரை தராமல் மோசடி செய்ததோடு நிலத்தை கிரயம் செய்தவர் தலைமறைவானார். இதுநாள் வரை உரிய பணத்தைப் பெற முடியாததால், கடந்த ஜூன் மாதம் மேச்சேரி காவல் நிலையத்தில், எருமப்பட்டி பகுதியை சேர்ந்த வாசுதேவன் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த மேச்சேரி காவல்துறையினர், இதற்கு முக்கிய இடைத்தரகராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணன் தனபாலை இன்று கைது செய்தனர். பின்னர் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து மேட்டூர் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி, தனபாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நில மோசடி விவகாரத்தில் 15 பேருக்கு தொடர்பு உள்ளதாக வழக்கு பதிவு செய்து, இதில் ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று இந்த மோசடியில் முக்கிய இடைத்தரகான ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜின் அண்ணன் தனபாலை மேச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாத உள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். மேச்சேரி பகுதியில் மட்டும் மேலும் சிலர் இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதனால் மேச்சேரி காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.