அடுத்தடுத்து சிக்கலை உருவாக்கும் ஜெயக்குமார் மரண வழக்கு..! வீடு அருகே கிணற்றில் கிடைத்த கத்தி..!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் இறந்து கிடந்த தோட்டத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக 5-வது நாளாக இன்றும் தடயவியல் நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்கு உள்ள பொருட்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த கிணற்றில் இருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அந்த கத்தியை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த கிணற்றில் தூர்வாறும் ஊழியர்கள், தீயணைப்பு படையினர் தடயங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கின் முக்கிய தடயங்கள் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 17 மணி நேரமாக கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.