பள்ளி குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை..! ஒருவர் பலி... குடிநீர் தான் காரணமா?
திருச்சி தென்னூர் பகுதியில் குடிநீர் இணைப்பில் கழிவு நீர் கலந்ததால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.ஆறு வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கும் மஞ்சள் காமாலை நோய் தொற்று பாதிப்பு உறுதியானது. தென்னூர் பகுதியில் பொதுமக்களிடம் இதுகுறித்து கேட்ட பொழுது தண்ணீரால் தான் இந்த நோய் தொற்று ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.அப்பகுதி முழுவதுமே மஞ்சள் காமாலை தொற்று பரவியதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து புகார் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்,
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் வயகோலம் பகுதியில் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வயலோகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த தர்மேந்திரன் மகன் நித்திஷ்வரன் (வயது 7) என்பவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அதே பள்ளியை சேர்ந்த முகேஸ்சித்திக் (7), நிஷாந்திகா (9), இயமாளினி (4), சித்தார்த் (7), தன்வீகாஸ்ரீ (7), சர்மிளா (10), தியா (4), லோகித் (8), யோகேஷ் (8), அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மதுமிதா (14), மாதேஷ் (11), கருப்பையா (17), விசாலி (17) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒரே கிராமத்தில் இரு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்போவதாக கூறினர்.
.png)