1. Home
  2. தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் முழுக்க முழுக்க அரசியல் சாயம்... அமைச்சர் மூர்த்தி மீது மாடுபிடி வீரர் புகார்..!

1

மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை காண மதுரை மற்றும் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதி மொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த போட்டியில், 1200 காளைகளும், 800 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், கருப்பாயூரணி கார்த்தி என்பவர் 18 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். மேலும் அவருக்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபிசித்தர் என்பவர் பெற்றார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், மாலை 6 மணி வரை கார்த்தியும், அபிசித்தரும் ஒரே எண்ணிக்கையில் தான் மாடுகளை அடக்கியுள்ளனர். அப்போதே போட்டி நிறைவுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், போட்டியை 6.30 மணி வரை ஏன் நடத்தப்பட்டது என இரண்டாவது பரிசை பெற்ற அபிசித்தர் கேள்வி எழுப்பியிருப்பது போட்டியின் நம்பகத்தன்மையில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருதுகின்றனர்.

அதுமட்டுமின்றி, கார்த்தி முதல் பரிசு பெற்றதில் அமைச்சர் மூர்த்தியின் சூழ்ச்சி உள்ளதாக இரண்டாவது பரிசு பெற்ற அபிசித்தர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பாயூரணி கார்த்தி அமைச்சரின் சொந்த தொகுதி என்பதால் அவருக்கு சாதகமாக அமைச்சர் மூர்த்தி செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் எந்த அரசியல் கலப்பு இல்லாமல், பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இரண்டாவது பரிசு பெற்ற அபிசித்தர் மனவிரக்தியில் பேசிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர்களிடம் அபிசித்தர் பேசியதாவது

”கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நான் 26 காளைகளை அடக்கியதால் முதல் பரிசு எனக்கு கொடுத்தார்கள். நான் 30 காளைகளை அடக்கினேன். ஆனால், 26 மாடுகள் என கணக்கிட்டு பரிசு கொடுத்தார்கள். இந்த ஆண்டு முதலாவது பரிசு பெற்ற கார்த்தி அமைச்சர் மூர்த்தியின் சூழ்ச்சியால் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு மாடுபிடி வீரர் கார்த்தி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முறையாக பதியவில்லை. இருப்பினும், போட்டியின்போது அமைச்சர் மூர்த்தி மாடுபிடி வீரர் கார்த்தியை மைக்கில் அழைப்பார். அதன் வீடியோ என்னிடம் உள்ளது. இது மற்ற மாடுபிடி வீரர்களுக்கு பெரிய அவமானம்.

நான் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க முறையாக பதிவு செய்தேன். ஆனால், கார்த்தி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. நான் 18 மாடுகளை அடக்கினேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நாளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து புகார் அளிக்கப்போகிறேன்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கமிட்டி நடத்தவில்லை. இதிலும் அரசியல் வந்துவிட்டது. அரசியலை தவிர்த்து பொதுமக்களிடம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஒப்படைக்கவேண்டும்.

மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், சிலர் என்னை அசிங்கமாக பேசினார்கள். நீ எல்லாம் அமைச்சரிடம் பேசலாமா? என ஒரு போலீசார் கேட்கிறார். நான் இரண்டாவது இடம் பிடிக்கவில்லை.

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முழுக்க முழுக்க அரசியல் தான் உள்ளது. அதற்கு முழு காரணம் அமைச்சர் மூர்த்தி தான். அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்கும் மாடுபிடி வீரர் கார்த்தியை அமைச்சர் அழைத்து வருகிறார். ஏனென்றால் கார்த்தி மதுரை (கிழக்கு) தொகுதியை சேர்ந்தவர். அமைச்சரின் தொகுதி. நான் சிவகங்கையை சேர்ந்தவன். எந்த அரசியலும் இல்லாமல் இனி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்.

போலீசார் என்னை தாக்கியதற்கும், அநாகரிகமாக பேசியதற்கும் நான் வழக்கு தொடரவுள்ளேன். கடந்த ஆண்டு எனக்கு கொடுத்த காரையும் எடுத்துக் கொள்ளுங்கள். காரை பரிசாக வழங்கி சிறந்த மாடுபிடி வீரரை கொலை செய்ய பார்க்கிறார்கள். வார்த்தையால் கொலை செய்கிறார்கள்.

இனி வருங்காலங்களில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றால் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அடுத்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் போட்டி நடைபெறவுள்ளது. அங்கு நாங்கள் கண்டிப்பாக அமைச்சரை சந்திப்போம். அங்கு முறையாக போட்டியை நடத்துகிறார்களா என்பதை பார்ப்போம்”, இவ்வாறு அபிசித்தர் பேசினார்.

Trending News

Latest News

You May Like