மீண்டும் ஆரம்பம்..! ஜூலை 15 முதல் ”மக்களுடன் முதல்வர்”..!
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டம் குறித்த சிறப்பு முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த முகாம்களை நடத்திடவும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15க்குள் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
30 நாட்களில் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டது.
இதில் 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும். மொத்தம் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஊராட்சிகளை இணைத்து ஏறத்தாழ 20,000 மக்களுக்கு ஒரு சிறப்பு முகாம் வீதம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களைப் பதிவு செய்திட துறை வாரியாக அறைகள் அமைக்கப்படும். அனைத்து மனுக்களும் முதல்வரின் முகவரி என்னும் வளைதளத்தில் பதிவு செய்யப்படும்.
அனைத்து சிறப்பு முகாம்களிலும் ஒரு பிரத்யேக இ-சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டு, பதிவேற்றப்படும் மனுக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஒப்புகை அனுப்பப்படும். இந்த முகாம்கள் நடைபெறுவது குறித்து குறும்படம் தயார் செய்யப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரை மூலம் விளம்பரங்கள் செய்யப்படும்.
மேலும் பொதுமக்கள் மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே தங்கள் பகுதிகளில் நடைபெறக்கூடிய “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் காணுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.