பெரும் சோகம்..! இதயத்துடிப்பு நின்றது..! கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், தனது கணவருடன் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண், கடந்த 6ஆம் தேதி காலை கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் பயணிப்பதற்காக திருப்பூரில் ஏறியுள்ளார்.
சித்தூரில் உள்ள தனது தாயைப் பார்ப்பதற்காக அவர் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொண்டுள்ளார்.
ரயிலின் பின்பக்கத்தில் பெண்களுக்கான பொதுப் பெட்டியில் அவர் பயணித்துள்ளார். இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை நெருங்கும்போது அந்தப் பெண் மட்டுமே பெட்டியில் இருந்துள்ளார்.
"காலை 10.45 மணியளவில் ஜோலார்பேட்டைக்கு ரயில் வந்தபோது என்னுடன் பயணம் செய்த பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டனர். ரயில் கிளம்பும் நேரத்தில் அந்த நபர் ஏறினார். இது பெண்கள் பெட்டி எனக் கூறிவிட்டு உடனே இறங்குமாறு கூறினேன்," என்கிறார் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்.
ஆனால், "அந்த நபரோ, 'தெரியமல் ஏறிவிட்டேன். ரயில் கார்டு கொடியைக் காட்டிவிட்டார். அடுத்து காட்பாடி ஸ்டேஷன் வரும்போது இறங்கிவிடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். அதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது," என பாதிக்கப்பட்ட பெண் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், "ரயில் பெட்டியில் அங்கும் இங்கும் அவன் உலாவிக் கொண்டிருந்தான். பிறகு பாத்ரூமுக்குள் சென்று ஆடையைக் கழட்டிவிட்டு வந்தான்.
என்னுடைய ஆடையைக் கழட்ட முயற்சி செய்தான். 'என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும். இப்படியெல்லாம் பண்ண வேண்டாம்' என சத்தம் போட்டேன். ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயன்றேன். அதற்குள் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்தான்" என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த நபரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியாக கழிவறைக்குள் செல்லவும் அந்தப் பெண் முயன்றுள்ளார்.
"என்னை ரயில் படிக்கட்டுக்கு அருகில் வைத்து அடித்தான். வலது கையை உடைத்தான். அவனிடம் இருந்து தப்பிக்க பத்து நிமிடம் வரை பேராடினேன். திடீரென எட்டி உதைத்தான். அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை" என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு நின்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.