பெரும் சோகம்..! காசாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி ..!

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும். உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இரு தரப்பும் நிராகரித்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 320 குழந்தைகள் ஆவர். 20,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 24வது நாளாக நேற்று தொடர்ந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது.
இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள நெடிவட் நகரை குறிவைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்தது. ஆனாலும், 3 ராக்கெட்டுகள் நெடிவட் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் வீடு சேதமடைந்துள்ளது. ஆனாலும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் தெற்கு எல்லைப்பகுதியில் பறந்த இஸ்ரேலிய டிரோனை சுட்டுவீழ்த்திவிட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் 2 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நாட்டின் தென்மேற்கே உள்ள டரா நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இதுவரை 8 ஆயிரத்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.