இது ரேஸ் டிராக் இல்ல ரயில்வே டிராக்... தண்டவாளம் மீது கார் ஓட்டிய இளம்பெண்..!

இளம்பெண் ஒருவர், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டிச்சென்றதால் ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
தெலுங்கானா சங்கர் பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் தாறுமாறாக தண்டவாளத்தில் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தண்டவாளத்தில் வேகமாக காரை ஓட்டி வந்தார். இவர் வேகமாக வந்த நிலையில் பெங்களூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்தி லோகோ பைலட்டை எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அதன் பிறகு ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த காரை நிறுத்தி பெண்ணை மடக்கி பிடித்தனர்.
அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து அவர்கள் இறக்கிய நிலையில் பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண்ணை கைது செய்த நிலையில் அவர் குடிபோதையில் இருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண் தாறுமாறாக கார் ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.