ஒரு செகண்ட் தான்... பிரசவ வார்டு படுக்கையில் விழுந்த ஃபேன்..! தாயும், சேயும் தப்பினர்..!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சுமார் 60 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. போடிநாயக்கனூர் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலைவாழ், தேயிலை தோட்ட, ஏலத்தோட்ட பணியாளர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில், போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீனா என்ற பெண் இங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூன்.11) சுமார் 8 மணியளவில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரவீனா தனது குழந்தைக்கு பாலூட்டி அவர் மாமியாரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். அந்த நேரத்தில், தலைக்கு மேல் இருந்த சீலிங் ஃபேன் எதிர்பாராத விதமாக கழன்று பிரவீனா இருந்த படுக்கையில் விழுந்துள்ளது.
ஃபேன் சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட பிரிவீனா அங்கிருந்து உடனே நகர்ந்து சென்றதால் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இதனால் அங்குள்ள மற்ற மகப்பேறு பிரிவுகளில் மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது.
குழந்தை பெற்றுகொண்ட பெண்களும், பிறந்த குழந்தைகளும் இருளில் போதிய காற்றோட்டம் இன்றி தவித்த நிலையில் அவர்களது உறவினர்கள் அவர்களுக்கு துணியை கொண்டு விசிறிய அவல நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து வேதனை தெரிவித்த பிரசவத்திற்கு வந்திருந்த பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், ''இங்கு முறையாக எலக்ட்ரீசியன் மற்றும் வாட்ச்மேன்கள் இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
கழிப்பறை வசதிகள் எதுவும் செய்து தரப்படாததால் பிரசவித்த பெண்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், பிரசவத்திற்கு சென்று வார்டுக்கு திரும்பும் பெண்களிடம் வார்டில் பணிபுரியும் பெண்கள் பணம் கேட்கின்றனர்'' எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.