ஒரே ஒரு நொடி தான்... சிறு கவனக்குறைவால் நிறுத்தி வைகப்பட்ட லாரி நகர்ந்து 4 வயது சிறுவன் பலி!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் (36). இவர் ஓட்டுநராக பணிபுரிகிறார். இவரது மகன் ரித்திஷ் (4). இந்த நிலையில், நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது.
அந்த லாரி வந்த போது கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கருணாகரன் என்பவர் சென்றார். அப்போது அங்கு ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். லாரி தண்ணீர் மூலம் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி திடீரென எதிர்பாராத விதமாக தானாக முன்னோக்கிச் சென்றது. அப்போது ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரித்திஷ் மீது லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் ரித்திஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விளையாடிக் கொண்டிருந்த தீபாஸ்ரீ (15) என்ற சிறுமி காயம் அடைந்தார். மற்ற சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரித்திஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை அறிந்ததும் லாரி டிரைவர் கருணாகரன் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த கருணாகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.