சூப்பரா இருக்கு..! மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோவில்..!

தஞ்சையில் உலகப் புகழ்பெற்ற பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038-ஆம் ஆண்டு சதய விழா அரசு விழாவாக கொண்டாட உள்ளதையடுத்து பெரியக்கோவில் வளாகம், ராஜராஜ சோழன் சிலை, தஞ்சை நகர வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.
தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். ராஜராஜ சோழன் பல்வேறு நாடுகளில் போர்புரிந்து தனது வெற்றியை உலகறியச்செய்திட தஞ்சையில் பெரியகோவிலை கட்டினார். மாமன்னன் மறைந்ததும் அவர் பிறந்தநாளை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1038 ம் ஆண்டு சதய விழா வருகிற 24-ம் தேதி துவங்கி 25-ம் தேதி இரவு வரை இரு தினங்கள் நடைபெறுகிறது.
இதனை ஒட்டி, பெரியக் கோவில் வளாகம், ராஜராஜ சோழன் சிலை, தஞ்சை நகர பிரதான சாலைகளிலும், மாநகராட்சி அலுவலகத்திலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.