வெளுக்கப் போகுது கனமழை... அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிய நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு வாக்கில் மெதுவாக நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் வரும் 15ஆம் தேதி வரை கனமழை தொடரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல கடலோர மாவட்டங்களில் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் பொதுமக்கள், மழைக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலகத்திற்கு செல்வோர் குடை, மழை கோட் உள்ளிட்ட மழைக் கால அத்தியாவசிய பொருட்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.