நடுங்க வைக்கும் குளிர்... குளிர்காய வீட்டுக்குள் தீமூட்டியவர் மூச்சுத்திணறி பலி..!
தமிழகம் முழுவதும் தற்போது பனி அதிகரித்துள்ளது. மாலை 7 மணி முதலே பனி என்பது தொடங்கி அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பனி என்பது கொட்டி தீர்க்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குளிரில் வாட தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் கடுங்குளிரில் இருந்து தப்பிக்க ஊட்டி அருகே இத்தலார் பஜார் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது வீட்டில் தீமூட்டினார். அதன்பிறகு ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி புவனா, மகள் தீயாஸ்ரீ, மாமியார் ஈஸ்வரி மற்றும் உறவினர் சாந்தா உள்ளிட்டவர்கள் வீட்டில் படுத்து தூங்கினர். குளிரில் இருந்து தப்பிக்க அவர்கள் வீட்டு ஜன்னலை பூட்டியிருந்தனர்.
இதனால் தீயில் இருந்து வெளியேறிய புகை வீட்டுக்குள் சுற்றியது. இதில் ஜெயப்பிரகாஷ் மூச்சுத்திணறி பலியாகி உள்ளார். ஜெயப்பிரகாஷ் மனைவி புவனா, மகள் தீயாஸ்ரீ, மாமியார் ஈஸ்வரி, உறவினர் சாந்தா உள்ளிட்டவர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.