1. Home
  2. தமிழ்நாடு

”மற்றவரிடம் திட்டு வாங்குவது கொடுமையாக இருக்கு” , ”நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாகிவிட்டது “ கண் கலங்கும் வியாபாரி !!

”மற்றவரிடம் திட்டு வாங்குவது கொடுமையாக இருக்கு” , ”நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாகிவிட்டது “ கண் கலங்கும் வியாபாரி !!


ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 1 மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் தொழிலாளர்கள் மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அரசியல் கூட்டங்கள், மாநாடுகளில் தலைவர்களின் முகம் பொறித்த ஸ்டிக்கர், கட்சி கொடி, கவர் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து பிழைத்து வந்த கிருஷ்ணமூர்த்தி.

தற்போது தன் குடும்பத்தை காப்பாற்ற முகக்கவசம், கையுறை ஆகியவற்றை விற்பனை செய்ய துவங்கியுள்ளார். கட்டுப்பாடுகள் மிகுந்த சென்னை நகர சாலைகளில் கவலை தோய்ந்த முகத்துடன் கை நிறைய முகக்கவசங்களையும், கை உறைகளையும் ஏந்தியபடி போவோர் , வருவோரிடம் கெஞ்சிக் கெஞ்சி விற்றுக் கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

22 ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வருவதாகவும் , அரசியல் கூட்டங்களுக்கு சென்றால் நாளொன்றுக்கு 3000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். கூட்டங்கள் இல்லாத நாட்களில் கட்சி அலுவலக வாயிலில் வியாபாரம் செய்வேன். அந்த பணத்தை வைத்து வீட்டு வாடகை கொடுத்து மனைவி, மகன், மகள் என 4 பேர் ஓரளவுக்கு குடும்பம் நடத்தினோம். மகளை பட்ட மேற்படிப்பு படிக்க வைத்துள்ளேன்.

இந்த நிலையில், கடந்த 1 மாதமாக சுத்தமாக வருமானம் இல்லை. சேமிப்பு பணமும் தீர்ந்து விட்டதால் இப்போது வேறு வழியில்லாமல் இந்த முடிவெடுத்தேன் என்றார். மேலும் பேசிய அவர் ; இப்போது இந்த வியாபாரத்திற்கு செல்ல வேண்டாம் என் பிள்ளைகள் வருத்தப்பட்டு சொல்கிறார்கள். அதற்காக செல்லாமல் இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியாதே என்றார்.

தினமும் 5 மணி நேரம் தெரு தெருவாக கால் கடுக்க நின்று உழைத்தால் 300 முதல் 500 வரை கிடைக்கிறது. மக்கள் இப்போது கடைகளில் போய் மாஸ்க் வாங்காமல் என்னிடம் வாங்குகிறார்கள். அதுவே பெரிய சந்தோஷம் என்றார். இந்த வியாபாரத்தில் ரோட்டில் நின்று யார் , யாருக்கோ பதில் சொல்ல வேண்டியது கூச்சமாக உள்ளது. இங்கு விற்காதே, அங்கு விற்காதே என்று சில கடைக்காரர்கள் சொல்கிறார்கள். எனக்கு 53 வயதாகி விட்டது.

இந்த வயதில் இன்னொருவரிடம் திட்டு வாங்குவது மிக கொடுமையாக இருக்கிறது என்று கண் கலங்கினார். மேலும் , நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாகி விட்டது. பிள்ளைகளுக்கு முட்டை வாங்கி கொடுக்கலாம் என்றால் ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்கிறது. எல்லாவற்றையும் நினைத்து இரவு தூக்கம் வர மாட்டேங்குது என்றவர். ஆண்டவன் கை விட மாட்டான் என்று நம்புகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இப்போது ஆண்டவனை விட மக்களை நம்பித் தான் வெளியே வருகிறேன்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வருகிறேன். விற்பனை நேரத்தை அரசு குறைக்காமல் இருந்தாலே போதும் என்று சொல்லிவிட்டு வியாபாரத்தை தொடர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி. சமுதாயத்தில் எந்த தவறு செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் மத்தியில் , இந்த தொழில் செய்தும் நேர்மையாக வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

Newstm.in

Trending News

Latest News

You May Like