1. Home
  2. தமிழ்நாடு

நீட் தேர்வு தொடர்பாக தரவுகளை வைத்துக்கொண்டு விஜய் பேசினால் நல்லது : அண்ணாமலை..!

1

திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, விஜய்க்கு நீட் குறித்துப் பேசுவதற்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால், அந்தத் தேர்வை எதிர்ப்பவர்கள் குறித்த புள்ளி விவரங்களுடன் மேலும் பல தரவுகளையும் சான்றுகளையும் வைத்துக்கொண்டு பேசினால் எல்லாருக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் எந்த ஒரு கருத்தையும் பொதுவெளியில் கூறும் போது, அதை ஆய்ந்து, தக்க சான்றுகளுடன் அதனை வெளியிடுவது தான் சரியாக இருக்கும். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வைக் காரணமாக வைத்து எதையும் பேசிவிட்டுப் போகக்கூடாது.

2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘நீட்’ தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதற்கு எங்களிடம் சான்று உள்ளது. ஆண்டுக்காண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயின்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார் அண்ணாமலை.

“திமுக, அதிமுக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் செயல்படட்டும். இக்கட்சிகளில் இருந்து கொள்கை ரீதியாக பாஜக மட்டும் தனித்துச் செயல்படும். இது பாஜகவிற்கு நன்மை பயப்பதாகவே இருக்கும் . எங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்கு விஜய்யின் ‘நீட்’ பேச்சு நல்லதையே செய்யும். ஆனால், ஒரு சாதாரண மனிதராகப் பார்க்கையில் விஜய் பேசியது தவறான கருத்து,” என்றார் அண்ணாமலை.

மேலும், இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு என மற்ற கட்சிகள் கொடி பிடித்தாலும் பாஜக மட்டும் மும்மொழிக் கொள்கையுடன் நீட் தேர்வை ஆதரிப்பது என தெளிவான கொள்கையுடன் இருந்து வருகிறது.

“இருமொழிக் கொள்கையைத் தாண்டி மூன்றாவது மொழியை மக்கள் விரும்புகின்றனர்; கேட்கின்றனர். இந்தி மொழி கட்டாயம் என்பது மத்திய அரசின் கல்விக்கொள்கை; அதை திமுக அரசு ஏற்கவில்லை,” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like