1. Home
  2. தமிழ்நாடு

செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதே சரியாக இருக்கும்: உயர்நீதிமன்றம்!

Q

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,மனுதாரர் தரப்பில், இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. வேறு இரு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியே இந்த கருத்தை மனுதாரர் தெரிவித்திருந்தார், பெங்களூருவிலும் இது சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மனுதாரர் தமிழர்கள் குறித்த தனது கருத்துக்காக எக்ஸ் வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார் என வாதிடப்பட்டது, அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மன்னிப்பு கோரும் விவகாரம் தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை பி.எஸ். ராமன், செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக கூறினார். தனது பேச்சுக்கு பேசியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். தமிழ் மக்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். இனி இப்படி பேசமாட்டேன் என ஷோபா தெரிவிக்க வேண்டுமெனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதற்குள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரி அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like