இது அரசின் கடமை...ஆனால் இதை செய்ய திமுக தவறிவிட்டது'' - ஓ.பன்னீர்செல்வம்..!

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில்,
''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் என அனைவருக்கும் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு உண்டு. ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், பெரும்பாலான நேர்வுகளில் இந்தக் கடமையைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சமூக நலத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச் சத்து மற்றும் உடல் நலத்தை உறுதி செய்தல், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினைத் தடுத்தல், சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும். மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் போஷான் அபியான் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், இவர்கள் 18,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை மாத சம்பளம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் மூன்று சதவிகித ஊதிய உயர்வு கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவும், மூன்று விழுக்காடு ஊதிய உயர்வினை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கவும், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கவும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை குறித்து சமூக நலத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றும், இன்னும் ஒரு வாரத்திற்குள் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், மத்திய அரசு நிதியை விடுவித்தவுடன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். மத்திய அரசிடமிருந்து உரிய நிதியை உரிய நேரத்தில் பெற்று சம்பளத்தை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசு நிதி தரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர மறுப்பது என்பது தொழிலாளர் விரோதக் கொள்கை.
மாண்புமிகு முதல்-அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உடனடியாக மூன்று மாத சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.