இந்த மாவட்டங்களில் இன்றும் கனமழை கொட்டும்... வானிலை மையம் எச்சரிக்கை !
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. ஒரே நாள் இரவில் பெய்த மழைக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாக மாறின. பல சாலைகளில் மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் இன்றும தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் 18 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 14 செ.மீ., வடசென்னை, செங்குன்றம் தலா 13 செ.மீ., சூரங்குடி 11 செ.மீ., வைப்பார், ராமேஸ்வரம் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளது.
newstm.in