இந்த அடிப்படையில் தான் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்தோம் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

தமிழக சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக ஆட்சிக் காலத்தில், 6 வார காலத்துக்குள், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அப்போதைய மத்திய அரசு காலதாமதம் செய்தது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த அன்றைய எம்பிக்கள் 22 நாட்கள், அவையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதைத்தான் பேரவையில் நான் தெரிவித்தேன்.
இப்போது ஆட்சியில் உள்ள தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். காவிரி விவகாரத்தில் என்ன அழுத்தம் கொடுத்தார்கள்? அவர்களால் ஒருநாளாவது அவையை ஒத்திவைக்க முடிந்ததா? தமிழகத்துக்கான உரிமையைப் பெற இவர்கள் என்ன செய்தார்கள்? விவசாயிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறுவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி ஒரு விவசாயி உயிரிழந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், ஏன் மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் கொடுக்கவில்லை?
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழு அமைக்க காலம் தாழ்த்திய காரணத்தால், அ.தி.மு.க அரசு உச்ச நீதிமன்றத்தில்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்தது. இதுக்கு எல்லாம் ஒரு தில்லு, திராணி வேண்டும். அது இந்த அரசிடம் இல்லை. ஏதோ மேலோட்டமாக பேசிக் கொண்டுள்ளனர்.
இப்போது விவசாயிகள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர். அந்த கொந்தளிப்பை சமாளிப்பதற்காகத்தான் இப்போது இந்த தீர்மானைத்தைக் கொண்டு வந்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நான் ஒரு விவசாயி. இதுபோன்ற தீர்மானத்தை எந்தக் கட்சி கொண்டுவந்தாலும், அதனை மனபூர்வமாக ஆதரிப்பது எங்களுடைய கடமை. விவசாயிகள் வேதனைப்படும்போது அவர்களுக்கு உற்றத்துணையாக அ.தி.மு.க எப்போதும் இருக்கும். அதைத்தான் இப்போதும் நாங்கள் செய்திருக்கிறோம். இருந்தாலும், காவிரி விவகாரத்தில், இந்த அரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதால்தான், தமிழகம் இன்றைக்கு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது" என்றார்.
முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தால் பலன் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பலன் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் ஆதரித்துள்ளோம். காரணம், விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் சந்தோஷம். அதன் அடிப்படையில்தான், இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.