1. Home
  2. தமிழ்நாடு

8 பேர் சரணடைந்தனர் என்பது உண்மையில்லை... காவல் ஆணையர் முக்கிய தகவல்..!

1

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி சென்னை வேப்பேரியில் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "அடையாளம் தெரியாத சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக போலீசுக்கு தகவல் வந்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக சென்று ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 நபர்களும் காவல் நிலையத்தில் வந்து ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தான். கைது செய்யப்பட்ட 8 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னை பாலு, அருள், மணிவண்ணன், ராமு உள்ளிட்ட 8 பேர், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம், பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் விசாரித்த வரை கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு. ஆம்ஸ்ட்ராங் உடன் பல்வேறு நபர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அதன் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம்.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் கிடைத்த தகவல்களை கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அருண் என்பவர் மீது மட்டும் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை.

கைது செய்யப்பட்ட நபர்கள்தான் கொலையை செய்ததாக தெரிவித்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாருக்கு எந்த தகவலும் இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில்தான் உளவுத்துறை அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தது. ஆம்ஸ்ட்ராங் லைசென்ஸ் உடன் ஒரு துப்பாக்கி வைத்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதி காரணமாக போலீசில் ஒப்படைத்த துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் ஜூன் 13 ஆம் தேதி திரும்பப் பெற்றுவிட்டார். ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்குக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 8 பேரில், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like