1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது - அமீர்..!

1

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கி வருகிறது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கூறுகையில், "தமிழகத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசு தலித் மக்களையும், தலித் தலைவர்களையும் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுகிறது" என நேரடியாகவே குற்றம்சாட்டினார். பல தலித் அமைப்புகளும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இயக்குநர் அமீரிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமீர், "தலித் தலைவர்கள் பாதுகாக்கப்படவில்லை. மற்ற தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்தில் அரசியல் இருக்கிறது. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என சொல்கிறார்கள். நிறைய பின் தகவல்கள் வருகின்றன.

சிசிடிவியில் இருந்தவர்கள் தான் கைது செய்யப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அது ஒன்றும் இன்றைய காலக்கட்டத்தில் பெரிய விஷயம் கிடையாது. அதே நேரத்தில், பொத்தாம் பொதுவாக தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதை ஒரு அரசியலாக தான் பார்க்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் தான் சார்ந்த சமூக மக்களுக்காக உழைக்கக்கூடிய நபராக இருந்திருக்கிறார். அந்த சமூக மக்களை படிக்க வைக்கவும், அவர்களை பெரிய பதவியில் அமர வைக்கவும் அவர் பல முயற்சிகளை செய்திருக்கிறார். அவர் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நடந்தது ஒரு துயரச் சம்பவம்தான்.

ஆனால், அதற்காக சமூகத்தில் இருந்து தலித் மக்களை மட்டும் தனியாக பிரித்து பார்க்கும் அரசியலை நான் செய்ய மாட்டேன். அதேபோல, இந்த சம்பவம் நடந்த அடுத்த தினமே சென்னை போலீஸ் கமிஷனரை தமிழக அரசு மாற்றி இருக்கிறது. இதுவும் சரியான நடவடிக்கையாக தான் பார்க்க முடிகிறது" என அமீர் கூறினார்.

Trending News

Latest News

You May Like