1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்த பூஜையில் பங்கேற்று ஈசனை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்... செல்வம் பெருகும்..!

1

சிவராத்திரி நாளில ஒரு காட்டில் பல பறவைகளை கொன்ற வேட்டைக்காரன் ஒருவனை பசியுள்ள சிங்கம் ஒன்று துரத்தி சென்றுள்ளது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேட்டைக்காரர் வில்வ மரத்தில் ஏறினார். சிங்கம் மரத்தின் அடிப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தது. மரத்திலிருந்து தூக்கத்தில் விழுவதைத் தவிர்ப்பதற்காக விழித்திருக்க வேட்டைக்காரர் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே இறக்கி போட்டு கொண்டே இருந்தார். அப்போது மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தன. வில்வ இலைகளை வழங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவன், பறவைகளை கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனைக் காப்பாற்றினார். இந்த கதை சிவராத்திரியில் வில்வ இலைகளுடன் சிவனை வழிபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

சிவலிங்கத்தின் புராணக்கதை மகா சிவராத்திரியுடன் ஆழமாக தொடர்புடையது. மஹா சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினான் என்று நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது மற்றும் சிவாவின் மகத்தான இரவு மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை கொண்டாட, சிவபெருமானின் பக்தர்கள் பகலில்விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவது ஒருவருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது. எனவே இன்று இரவு சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

முதல் கால பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இது ஜோதி சொரூபமான ஈசனின் தலைப்பகுதியை தேடி அன்னப்பறவையாய் மாறிய நான்முகன் பிரம்மன் எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும். மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் பொருட்களால் செய்யப்படும் பூஜை இதுவே. இந்த கால பூஜையில் பஞ்ச கவ்வியம் எனப்படும் பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் பூசி மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து தாமரைப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். நைவேத்தியமாக பாசிப்பருப்பு பொங்கல் படைப்பார்கள். ரிக்வேதமும், சிவபுராணமும் பாராயணம் செய்வார்கள். நெய் தீபம் காட்டி முதல் கால பூஜை செய்வார்கள். இந்த பூஜையை தரிசனம் செய்பவர்களின் பிறவிப்பிணி நீங்கும்.

இரண்டாம் ஜாம பூஜை இரவு 9 - நள்ளிரவு 12 மணி வரைக்கும் நடைபெறும். அக்னியாய் ஒளிர்ந்த சிவபெருமானின் திருவடியை தேடி சென்ற மகாவிஷ்ணு ஈசனுக்கு செய்யும் பூஜை இரண்டாம் ஜாம பூஜை. இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து இறைவனை அலங்கரிப்பார்கள். வெண்பட்டினால் ஆடை அணிவிப்பார்கள். இந் நேரத்தில் வில்வம், தாமரைப்பூ, துளசியினால் அர்ச்சனை செய்வார்கள். இனிப்பு பாயாசம் நைவேத்தியம் செய்வார்கள். நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை செய்வார்கள். யஜூர்வேதம் பாராயணம் செய்வார்கள். எட்டாம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் பாராயணம் செய்யப்படும். இந்த பூஜையில் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும் செல்வம் பெருகும். சிவ அருளுடன் திருமாலின் அருளும் கிடைக்கும்.

மூன்றாவது கால பூஜை நள்ளிரவு 12 - அதிகாலை 3 மணி வரை நடைபெறும். மூன்றாம் ஜாம பூஜை காலத்தினை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். அப்பன் ஈசனுக்கு அம்பாள் பார்வதி மன மகிழ்ச்சியோடு செய்யும் பூஜைதான் மூன்றாம் கால பூஜை. தேன் அபிஷேகம் செய்து பச்சைக்கற்பூரம் சாற்றுவார்கள். மல்லிகை, வில்வ இலைகளால் அலங்காரம் செய்து சிவப்பு வஸ்திரம் அணிவிப்பார்கள். எள் சாதம் நிவேதனமாக படைத்து நெய் தீபம் ஏற்றுவார்கள். சாம வேதம் எட்டாம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் செய்வார்கள். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்கும் சிவ சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காவது கால பூஜை மறுநாள் அதிகாலை 3 மணி காலை 6 மணிவரைக்கும் நடைபெறும். நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். இந்த காலத்தில் குங்குமப்பூ சாற்றி கரும்பு சாறு, பால் அபிஷேகம் செய்வார்கள். பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் சாற்றுவார்கள். நந்தியாவட்டை பூக்கள், அல்லி, நீலோற்பவ மலர்களால் அர்ச்சனை செய்வார்கள். சுத்தம் நைவேத்தியம் படைப்பார்கள். அதர்வண வேதம், எட்டாம் திருமுறையில் போற்றி திருவகவல் பாராயணம் செய்வார்கள். தூப தீப ஆராதனை செய்து வழிபடுவார்கள்.

Trending News

Latest News

You May Like