1. Home
  2. தமிழ்நாடு

இந்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்வது உத்தமம்..!

1

தீபாவளி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகைக்கு முன்பாகவே நீராட வேண்டும். அன்றைய தினம் எண்ணெயில் திருமகளையும், வெந்நீரில் புனித கங்கையையும் வரப் பண்ணி நீராட வேண்டும். இதையே “தைலே லஷ்மி, ஜலே கங்கா” என்று சொல்வது வழக்கம்.

தீபாவளியன்று தேய்த்துக்குளிக்க வேண்டிய எண்ணெயை முதல்நாளே சிறிது அரிசியும், கொஞ்சம் ஓமமும் சேர்த்து காய்ச்சி வைத்துவிட வேண்டும். அரிசி மகாலட்சுமியின் அம்சம்.அன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.தீபாவளி திருநாளில் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், பலகாரமும் முதலிடம் பிடிக்கும். கிராமப்புறங்களில் அசைவ உணவு களைகட்டும் இவை அனைத்துக்கும் முன்பாக உடம்பில் சூடு போக நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது பாரம்பரியமான ஒன்றாகும். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். நவம்பர் 12 ஆம் தேதியன்று தீபாவளி நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரிசையாக அமர்ந்து ஒரு கின்னத்தில் எண்ணெய் ஊற்றி உடம்பில் தேய்த்து ஊறவைத்து வெந்நீரை காய்ச்சி அதில் சிறிதளவு சந்தனம், மஞ்சள் போட்டு குளிப்பது பாரம்பரியம். வெந்நீரில் சந்தனம், மஞ்சள் தூள் போடுவதால் அந்த நீரில் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம்.

எண்ணெயில் பூண்டு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து பதமான சூட்டில் இதமாக காய்ச்ச வேண்டும்.வெது வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளாங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். அரைமணிநேரம் ஊற வைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு கலப்படம் எதுவும் இல்லாத அரப்பு, சீயக்காய்தான் பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்து விட்டு புத்தாடை அணிந்து இறைவனை வணங்கி விட்டு சாப்பிட வேண்டும்.

இன்றைக்கு பித்தமும் உடல் சூடும் அதிகரித்து இருக்கிறது. நல்லெண்ணெய் குளியல் பித்தம், உடல் சூட்டை தணிக்கிறது. தோல் வறட்சி நீங்கும். ரத்த ஒட்டம் சீராக இருக்கும். எண்ணெய் குளியல் மன அழுத்தத்தை நீக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவேதான் வாரம் இருமுறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.

சனி நீராடு என்பது பெரியவர்கள் கூறும் முது மொழி. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியம். பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும். பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இளநரை வராது. சளி, தலைவலி, சைனஸ் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும்.

தீபாவளி தினத்தில் (நவ.12)  குரு ஹோரையான அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் கங்கா ஸ்நானம்  செய்து முடிக்க வேண்டும். கங்கை மாதா அதிகாலை வேளையில் மட்டுமே நாம் நீராடும் தண்ணீரில் குடியிருப்பதாக ஐதீகம். எனவே,  அதிகாலை 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்

மறந்தும் சாப்பிடாதீர்கள்: தீபாவளி மட்டுமல்லது பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் ஓய்வு எடுப்பது அவசியம். குளிர்ச்சியான தயிர், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது. இன்றைய பரபரப்பான காலத்தில் இளைய தலைமுறையினர் எண்ணெய் குளியலை மறந்தே விட்டனர்.

Trending News

Latest News

You May Like