அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்! தலைமைச் செயலாளர் விளக்கம் !

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட, ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை, ஆசிரியர்கள் உட்பட, அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என, தமிழக தலைமைச் செயலர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், கல்லுாரி விரிவுரையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர்களுக்கு உயர் கல்வி பயில ஊக்கத்தொகை தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
அதே போன்று, கணக்குத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, சார்நிலை பணியாளர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. ஆனால், கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழக அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அரசு ஊழியர்களுக்கும் உயர் கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை குறித்து ஆசிரியர் சங்கங்கள் சில சந்தேகங்களை எழுப்பியது.
இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலர் சண்முகம் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அரசு வெளியிட்ட அரசாணை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு, மார்ச், 10-ம் தேதிக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட நபர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அதில் தெரிவித்துள்ளார்.