பொதுமக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அலர்ட்! காசாவை விட்டு உடனே வெளியேறுங்கள்..!

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை, காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி சுமார் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஹமாஸ் அமைப்பு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க, போர் சூழல் உருவானது. இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இதுவரையிலும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை ஹமாஸ் சந்திக்க நேரிடும் என்று சூளுரைத்தார்.
இதைத்தொடர்ந்து ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, காசா மீது SWORDS OF IRON என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. இதனால் காசாவிலும் குண்டு மழைகள் பொழிகின்றன. ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கூறப்படும் காசா டவர் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது.
இதற்கிடையே காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு கரை பகுதியிலும் வன்முறை பரவியுள்ளது. அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கும், இஸ்ரேலிய காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீனியர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் ராணுவத்திற்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் உயிரிந்தோர் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்களை குண்டுவீசி தரைமட்டமாக்க இருப்பதாகவும் அதனால் காசாவை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதனிடையே காசாவுக்கு அளிக்கப்படும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை நிறுத்தப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். எந்த வித சரக்கு போக்குவரத்தும் நடைபெறாது என்றும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதேபோல் காசா வான் பரப்பு வழியாக செல்லும் வானூர்திகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. எகிப்துடன் இணைந்து காசாவை ஒட்டிய பகுதிகளில் வான்பரப்பை கட்டுப்படுத்துவதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.