பிரபல இஸ்கான் கோவிலுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!
கடந்த சில தினங்களாக விமானங்கள், விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டலை தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில், அது வெறும் புரளி என தெரிய வருகிறது. இதனால், வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு சில கண்டிப்புகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதியில் பிரபலமான இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பக்தர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கோவிலின் இ-மெயில் முகவரிக்கு வந்த மெசேஜில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ., தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலை தகர்ப்பார்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், பதறிப்போன கோவில் நிர்வாகிகள், இது தொடர்பாக போலீசாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் கோவிலின் மூலைமுடுக்குகளிலும் தீவிர சோதனை நடத்தினர். எந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்படாத நிலையிலும், கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 26ம் தேதி திருப்பதியில் உள்ள பிரபலமான 2 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, பின்னர் நடந்த சோதனையில் வதந்தி என தெரிய வந்தது.