மாஸ்கோவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல் : 115 பேர் பலி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு..!

ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3-வது முறையாக அதிபராகி ஸ்டாலினின் சாதனையை முறியடித்திருந்தார். இந்நிலையில், இந்த கோரத் தாக்குதல் நடந்துள்ளது. ரஷ்யாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது.
மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6,200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்தின்போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டுகள் பாய, பலர் சரிந்து விழுந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீ வைத்தும் சென்றனர். உடனடியாக தகவலறிந்த காவல், தீயணைப்பு, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 115 பேர் பலியாகினர். 145-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரெய் வாட்சன் கூறுகையில், “இம்மாதத் தொடக்கத்திலேயே மாஸ்கோவில் ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்த சதி செய்யப்படுவதாகவும், குறிப்பாக இசை நிகழ்ச்சியை குறிவைத்து சதி செய்யப்படுவதாகவும் ரஷ்ய அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு தகவல் அளித்தது.
தீவிரவாத சதிச் செயல்களைப் பற்றி தகவல் கிடைத்தால் அதை நாடுகளுடன் பகிர்வதை கடமையாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அதிபர் ஜோ பைடனின் உத்தரவின்படி இத்தகைய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்து வருகிறது. அதன்படியே ரஷ்ய அதிகாரிகளுக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம்” என்றார். அதேபோல், இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது நம்பகமானதுதான் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இந்தத் தாக்குதலை கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாஸ்கோவில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனைகள். ரஷ்ய அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இந்தத் துயரமான தருணத்தில் இந்தியா துணை நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவில் ஐஎஸ் அமைப்பு கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக சதி வேலைகளை அரங்கேற்ற முயற்சித்து வந்தது தெரியவந்துள்ளது. மார்ச் 7-ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் நடக்கவிருந்த தாக்குதலை உளவுத் துறை முறியடித்தது. அதற்கு சில நாட்களுக்கும் முன்னதாகத்தான் ரஷ்ய பாதுகாப்புப் படை ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 6 பேரை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், இந்த கோரத் தாக்குதல் நடந்துள்ளது. இதற்கிடையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் இத்தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் சதி இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மிகைலோ போடோலியாக் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். உக்ரைன் ஒருபோதும் இது போன்ற பயங்கரவாதத் தாக்குதலை ஊக்குவிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.