ஈஷா அவுட்ரீச் சார்பில் வாழை சாகுபடி கருத்தரங்கு..!
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடத்திய "ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கம்" அன்னூர் மற்றும் காரமடை பகுதிகளில் நேற்றும், இன்றும் (மே 14 & 15) நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு, வாழை சாகுபடி குறித்த பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இக்கருத்தரங்கில் குறிப்பாக இயற்கை வழி வாழை சாகுபடி முறைகள், வாழையில் ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், மதிப்பு கூட்டல் முறைகள் மற்றும் வாழை சாகுபடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்தும் வல்லுநர்கள் விரிவாக விளக்கினர்.
அன்னூரில் மன்னீஸ்வரர் மற்றும் சென்னியாண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும், காரமடை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் - காரமடையிலும் இந்த கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தியது.