ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி..!

ஈஷாவை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக, பல்வேறு பணிகள், 'ஈஷா அவுட்ரீச்' வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து, ஈஷா அவுட்ரீச்சின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுவாமி சிதாகாசா கூறியதாவது:
சுற்றுவட்டார கிராம மக்கள், ஈஷாவை, அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே கருதுகின்றனர். அவ்வகையில், ஈஷாவில் பெண்மையின் சக்திமிக்க வெளிப்பாடாக வீற்றிக்கும் லிங்கபைரவி வளாகத்தில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். சமீபத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு, மாலை அணிவித்து, சந்தனம், குங்குமமிட்டு வளைகாப்பு நடத்தப்பட்டது. ஈஷா சார்பில் வளையல், லிங்கபைரவி புடவை, அருள் பிரசாதம் ஆகியவை தாய் வீட்டு சீதனமாக வழங்கப்பட்டன.
இவ்வாறு, அவர்கூறினார்.
பங்கேற்ற கர்ப்பிணிகள் சிலர் கூறுகையில், 'குடும்பத்தை தாண்டி எங்களை சுற்றியுள்ளவர்கள் நடத்தியது, அழகான அனுபவத்தை தந்தது. சொந்த பந்தங்களுடன் இருந்தது போலவே உணர்ந்தோம்' என்றனர்.