பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய ஈஷா!
கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (29/09/2024) பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 'சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை' வழங்கும் விழா நடைப்பெற்றது. ஈஷாவால் இந்தக் கல்வி உதவித்தொகை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்யகுண்டம் அருகில் நடைப்பெற்ற இவ்விழாவில் வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் திரு. குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலையை திரு. குமார் மற்றும் ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
ஈஷாவைச் சுற்றி பல்வேறு பழங்குடியின குடியிருப்புகள் மற்றும் கிராமங்கள் அமைந்துள்ளன. பொருளாதாரம், குடும்ப சூழல் போன்ற காரணங்களால் இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட வகுப்பிற்கு மேல் கல்வியை தொடர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனை மாற்றி அவர்களுக்கு முறையான கல்வி வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஈஷா இந்தக் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.
பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி சென்று மேற்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஈஷாவால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களின் கல்விச் செலவு, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து பள்ளிக்கு சென்று வர தேவையான வசதிகள், மேலும் பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் கல்விக்கான உதவி ஆகியவை ஈஷாவால் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கல்வி உதவித்தொகையால் பயன்பெற்று கல்வி பெற்ற பலர் இன்று தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களாகவும், IT துறை நிறுவனங்கள் மற்றும் ஈஷா யோக மையத்திலும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை மாணவ, மாணவிகளே ஒருங்கிணைத்து நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, ஈஷா கிராமிய கலைக் குழு மூலமாக கிராமிய கலைகளை கற்கும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், ஈஷாவால் பயிற்சி அளிக்கப்படும் கிராமப்புற மாணவர்களின் களரிப் பயட்டு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.