1. Home
  2. தமிழ்நாடு

இன்று உச்ச நீதிமன்றத்தில் ஈஷா தொடர்பான வழக்கு விசாரணை..!

1

ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரு மகள்களை மீட்டு தர கோவையை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். இதில் ஈஷா மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என விசாரணை செய்து, அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தில் காவல் துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஈஷா யோகா மையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டில், கடந்த 3ம் தேதி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு
விசாரணை நடத்தியது. இதில் ஈஷா மையத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிடப்பட்டது. மேலும், ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளில் மொத்தம் 6 பேர் காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தகன மையம் தற்போது செயல்படவில்லை.

ஈஷா மையத்திற்குள் செயல்படும் மருத்துவமனை காலாவதியான மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்கிறது. ஈஷா மையத்தில் தங்கி இருக்கும் சிலருக்கு மன அழுத்தம் உள்ளது. இதற்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர். இங்குள்ள மருத்துவ மையம் சட்டப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. எக்ஸ்ரே மையத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஈஷா மையத்தில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு முறையாக செயல்படவில்லை.

காமராஜ் என்பவரின் இரண்டு மகள்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது.
இதில், 2024ல் மட்டும் 70 முறை செல்போனில் பெற்றோரிடம் பேசி உள்ளதாகவும், 3 முறை நேரில் சந்தித்ததாகவும், ஈஷாவில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஈஷா மையத்தில் பிரம்மச்சாரிகளிடம் விசாரணை நடத்தியதில், சுதந்திரமாக வெளியே செல்ல தடை இல்லை என தெரிவித்தனர். ஈஷா யோகா மையம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

உச்ச நீதிமன்றத்தில் ஈஷா தொடர்பான இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Trending News

Latest News

You May Like