இது தான் உங்க அரசியலா..? ஏ.சி ரூமில் தேர்தல் வியூக நிபுணர்களை சொல்வதைக் கேட்பது...விஜய் - பிகே மீட்டிங் பற்றி அண்ணாமலை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தவெகவுக்கு 15 % - 20% வாக்குகள் கிடைக்கும் என பிரசாந்த் கிஷோரின் குழு ஆய்வு அறிக்கையை தவெகவுக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தைப்பூசம் விழாவையொட்டி காவடி எடுத்தார். அதன்பின்னர் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும், நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறோம்.
மக்களை சந்தித்தால் அவர்கள் பிரச்சனையைச் சொல்வார்கள். அதுதான் அரசியல். ஏ.சி ரூமில் உட்கார்ந்து கொண்டு தேர்தல் வியூக நிபுணர்களை உட்கார வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்பது என்ன அரசியல்? மக்களை சந்தியுங்கள், தெருவில் நில்லுங்கள், மக்கள் ஒவ்வொருவரும் அரசியல் வியூகவாதிகள் தான்.
மக்களைச் சந்திக்காமல் ஒவ்வொரு தலைவரும் தேர்தல் வியூக நிபுணரை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்தால், வரும் காலத்தில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். எல்லோரும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு பொலிடிக்கல் கன்சல்டண்டை வைத்து அரசியல் செய்து விட முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.