1. Home
  2. தமிழ்நாடு

இது தான் உங்க விடியல் அரசா..? மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை தரையில் படுக்க வைத்த அவலம் - டி.டி.வி. கண்டனம்..!

1

டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கிழிந்த நிலையில் இருக்கும் மெத்தைகளால் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் மலைபோல குவிந்திருக்கும் மருத்துவக் கழிவுகளால் நிலவும் சுகாதார சீர்கேட்டால், அம்மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் புதுவகை நோய்களுடன் திரும்பிச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அதிகளவிலான பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழக்கூடிய கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையின் தற்போதைய அவல நிலை அங்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப்பணியாளர்கள், மருந்துகள் தட்டுப்பாட்டால் தனியார் மருந்தகங்களை நாடும் பொதுமக்கள், போதிய படுக்கைகள் இல்லாததால் தரையில் படுக்கும் நோயாளிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள், தமிழக சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

எனவே, சுகாதாரத்துறையில் முன்னணி மாநிலம் தமிழகம் என்ற வெற்று விளம்பரத்தை இனியாவது ஓரங்கட்டி வைத்துவிட்டு, மருத்துவமனைகளின் அவல நிலையை உணர்ந்து அங்கு நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தட்டுப்பாட்டையும், அடிப்படை வசதிகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like