ஒரு பூசாரி செய்யுற வேலையா இது ? பூசாரியின் கொடூரச் செயல்!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38), கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (28). கடந்த சில மாதங்களாக பசுவராஜ், பெங்களூரு சென்று கல் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது மனைவியிடம் போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஆனால் கடந்த 15ம் தேதியில் இருந்து மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்துள்ளது. அதனால் பதற்றம் அடைந்த பசுவராஜ், உடனடியாக தாரமங்கலம் திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் மனைவி செல்வியை காணவில்லை. இதுபற்றி தாரமங்கலம் போலீசில் பசுவராஜ் புகார் கொடுத்தார்.
இதுகுறித்த போலீஸாரின் விசாரணையில், கடந்த 15ம் தேதி சேலம் இரும்பாலை அருகேயுள்ள பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு செல்வி குறி கேட்கச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.
அதனால், அந்த கோயில் பகுதிக்கு நேற்று மாலை வந்து விசாரித்தனர். அந்த பகுதியில் தேடியபோது கோயிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் செல்வி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது வாயில் நுரை தள்ளியிருந்தது. மேலும், அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை காணவில்லை. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கோயில் பூசாரியால் செல்வி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு குறி கேட்க செல்வி வந்துள்ளார். அப்போது அங்குள்ள பூசாரி குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.30 ஆயிரம் பணத்தை பூசாரி குமாரிடம் இருந்து செல்வி வாங்கியுள்ளார்.
அந்த பணத்திற்கு பெங்களூருவில் இருந்து கணவர் மூலம் குறைந்த விலைக்கு தங்கக்காசு வாங்கித்தருவதாக சொல்லியுள்ளார். ஆனால், தங்கக்காசு வாங்கிக் கொடுக்கவில்லையாம். கடந்த 15ம் தேதி, கோயிலுக்கு வரும்படி செல்வியை குமார் அழைத்துள்ளார். அதன்படியே அவர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், தனது பணத்தையும் திரும்பத் தராமல், உறவுக்கும் வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த குமார், குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து, செல்வியை கொலை செய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார். இந்த விவரங்கள் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.