1. Home
  2. தமிழ்நாடு

இன்று வெளியிடப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு இது தான்?

1

கீழடி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாடுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வும் இன்று நடைபெற இருக்கிறது. காலை 10 மணியளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில் மிக முக்கியமாக இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை முதல்வர் வெளியிட இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான செய்தியை டேக் செய்து, "இன்று முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!" என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அப்படி என்ன அறிவிப்பு வெளியாக போகிறது என பல்வேறு தரப்பினரும் விவாதங்களை எழுப்பியிருந்தனர். மகளிர் உரிமைத்தொகை குறித்து ஏதேனும் அப்டேட் இருக்கிறதா? ஒருவேளை பொங்கல் சிறப்பு பரிசு இந்த ஆண்டு வழங்கப்படவில்லையே.. அது குறித்த அறிவிப்பாக இருக்குமோ? என்றெல்லாம் சோஷியல் மீடியாக்களில் பேச்சுக்கள் அடிப்பட்டது. இப்படி இருக்கையில் நாளை வெளியாக உள்ள அறிவிப்பு குறித்த தகவல்கள் வந்திருக்கின்றன.

அதாவது சிந்து சமவெளி நாகரிகத்தின் வெண்கல காலத்தின்போதே, தமிழ்நாட்டில் இரும்புக் காலம் தொடங்கியதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், கார்பன் டேட்டிங் சான்றுகளின் அடிப்படையில் உறுதிபடுத்தப்பட்ட அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு மனிதர்களாக உள்ள நாம், பல லட்சம் ஆண்டுகளாக பரினாமமடைந்து வந்திருக்கிறோம். இந்த வளர்ச்சிபாதையை ஆய்வாளர்கள் கற்காலம் (Stone Age), வெண்கல காலம் (Bronze Age), இரும்பு காலம் (Iron Age) என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். கற்காலம் என்பது ஆதி மனிதனின் காலம். அப்போது நாம் பெரிய அளவில் நாகரிகமடையவில்லை. வேட்டை, உணவு, இருப்பிடம் ஆகியவற்றிற்கு பெரிய போராட்டம் இருந்தது. இதன் பிறகுதான் மனிதன் வெண்கலத்தை கண்டுபிடிக்கிறான். சுமார் 3500 முதல் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த காலம் வெண்கல காலம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு மனிதன் இரும்பை கண்டுபிடிக்கிறார். அந்த சமயத்தில் மனிதன் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நாகரிகம் அடைந்திருக்கிறார். கூட்டு வாழ்க்கை, உணவு தயாரித்தல், விவசாயம் என சமூக விலங்காக மனிதன் மாறியிருக்கிறான்.

இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரிகம்தான் மிக பழமையானது என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு இணையான நாகரிகம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டபோது மொத்த இந்தியாவே தமிழ்நாட்டை பெருமையுடன் பார்த்தது. இப்படி இருக்கையில், சிந்து சமவெளியில் வெண்கல காலம் நிலவி வந்தபோது, தமிழ்நாட்டில் இரும்பு காலம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியெனில் சிந்து சமவெளி நாகரிகத்தை காட்டிலும் நாம் ஒரு படி முன்னோக்கி இருந்திருக்கிறோம் என அர்த்தம்.

கீழடி உள்ளிட்ட தொல்பொருள் ஆய்வு தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாகவே தொடங்கிவிட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இதனை தமிழக அரசு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. முதல்வரும் இந்த அறிவிப்பைதான் குறிப்பிட்டிருக்கிறார் என்று சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Trending News

Latest News

You May Like