ஒரு எம்.பி.,க்கே இந்த நிலையா..? தமிழச்சி புகாருக்கு அண்ணாமலை பதில்..!

டில்லியில் இருந்து சென்னை வருவதற்காக ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் சமூகவலைதளப் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை போட்டிருந்தார்.
அதில், பிஸினஸ் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி, தன்னுடைய டிக்கெட் எகானமி வகுப்புக்கு மாற்றப்பட்டு இருந்ததாக கூறியிருந்தார்.'இதை ஏற்கவே முடியாது. ஒரு எம்.பி.,யை இப்படி நடத்த முடியும் என்றால், மற்ற பயணிகளை நீங்கள் எப்படி கையாள்வீர்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே நடுங்குகிறது. பயணிகளின் உரிமை பற்றிய அக்கறையின்மையும், சேவைகளின் தரமும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது' என்று கூறியிருந்த அவர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சரையும் 'டேக்' செய்திருந்தார்.
அவரது இந்தப் பதிவை டேக் செய்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவு:இது நடந்திருக்கக் கூடாத ஒன்றுதான். இருந்தாலும், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, தரம் இறக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை கூறுவதற்கு இதுவே சரியான நேரம். 'ஒரு எம்.பி.,க்கே இந்த நிலைமையா' என்ற பேச்சு, வாரிசு அரசியலில் திளைப்பவர்களின் மனப்பான்மையை காட்டுகிறது. விடியல் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு, கடந்த 4 ஆண்டுகளாக தமிழக மக்களை இருளில் தள்ளியுள்ளனர்.
தி.மு.க., ஆட்சியின் கீழ் மக்களின் நிலைமையை விவரிக்க 'தரம் இறக்கப்பட்ட' என்ற சொல் கூட மிகவும் மென்மையானது போலவே தெரிகிறது.கசப்பான உண்மையை தெரிவிப்பதற்கான கடவுளின் வழி இது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.