இப்படித்தான் குரூப் 4 வினாத் தாள்களை கொண்டு போவீங்களா?
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் , வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாகவுள்ள 3,935 இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு நாளை (ஜூலை 12) நடக்கிறது. நாளைய தினம் தேர்வு சரியாக காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என்பதால் தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வரவேண்டும் எனவும், தேர்வு மையங்களை முன்கூட்டியே தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வினாத் தாள்களை கொண்டு செல்லும் தனியார் பேருந்தின் கதவுக்கு ஏ4 சீட்டால் மறைத்து சீல் வைத்த அதிகாரிகளின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டிஎன்பிஎஸ்சி போன்ற அரசு பணி தேர்வுகளுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பு நிறைந்த வாகனத்தில் காவலர்களின் கண் பார்வையில் அனுப்பி வைக்கப்படும். ஆனால், மதுரையில் தனியார் பேருந்து மூலமாக வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத் தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தது. அப்போது வினாத் தாள்களை கண்டெய்னர் போன்ற முழுவதும் மூடப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லாமல் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்துள்ளனர். அது மட்டுமின்றி, தனியார் பேருந்துகளின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு ஏ4 தாள்களை ஒட்டி சீல் வைத்து பாதுகாப்பு என கூறி அலட்சியம் செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வின் போது வினா தாள்கள் கொண்டு சென்ற வாகனங்களில் பணியில் இருந்த காவல் துறையினர் மூலமாக வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.