1. Home
  2. தமிழ்நாடு

இது தான் டிஜிட்டல் இந்தியாவா? சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.99,999 திருடப்பட்டது - தயாநிதி மாறன் காட்டம்..!

1

திமுக எம்.பி. தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் உள்ளார். அவரது செல்போன் எண்ணை கடந்த 8ஆம் தேதி தொடர்பு கொண்ட மர்மநபர்கள் 3 முறை இந்தியில் பேசினர். பின்னர் திடீரென அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரே பரிவர்த்தனையில் ரூ.99,999 எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த  புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 10) அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  விரைவில் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி இணைப்பு கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுக் கொடுப்போம் என்று காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி தயாநிதி மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் விரிவான அறிக்கையை தற்போது பதிவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஐடிஎஃப்சி வங்கி BillDesk வழியாக அனைத்து சாதாரண பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடந்து நிகர வங்கி பரிமாற்றத்தின் மூலம் எனது ஆக்சிஸ் வங்கி தனிப்பட்ட சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.99,999 திருடப்பட்டது.அத்தகைய பரிவர்த்தனைகளுக்கான நிலையான நெறிமுறையான OTP, எனது இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை. அதற்கு பதிலாக, எனது வங்கி கணக்குடன் இணைப்பு கணக்கில் இருக்கும் எனது மனைவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது.

செல்போனில் பேசிய மர்மநபர்கள் வங்கியில் இருந்து பேசுவது போல் நடித்தனர்.  ஆனால் அவர்களின் முகப்பு புகைப்படம் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின்(CBIC) லோகோவை காட்டியது. இது எனது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.இதனையடுத்து எனது கணக்கின் அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாகத் தடுக்கத் தொடங்கினேன். எப்படி மர்ம நபர்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகினார்கள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இவ்வளவு எளிதாக மீறினார்கள் என்பது எனக்கு புதிராக உள்ளது.

ஆக்சிஸ் வங்கிக்கும் இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. பணப் பரிமாற்றம் நடைபெற எனது எண்ணிலிருந்து OTP ஏன் பெறப்படவில்லை என்பதற்கான உறுதியான விளக்கத்தையும் அவர்களால் கொடுக்க முடியவில்லை.

தொழில்நுட்பத்தை அறிந்தவர் மற்றும் தனிப்பட்ட தரவுகளில் எச்சரிக்கையாக இருப்பவருக்கு இது நிகழலாம் என்றால், முதல் முறையாக டிஜிட்டல் பயனர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் நிலைமை என்ன? யாருடைய தரவுகளும் பாதுகாப்பானதா?
கடந்த காலங்களில், நான் எம்.பி. என்ற முறையில் சைபர் கிரைம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதியமைச்சகத்தும் கடிதம் எழுதியுள்ளேன். இன்று, ஒரு பாதிக்கப்பட்டவராக, நான் நீதியைக் கோருகிறேன்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2023 வரை இந்தியாவில் நடந்த சைபர் கிரைம்களில் 75% நிதி மோசடியே காரணம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. 2018 ஆம் ஆண்டிலேயே முக்கியமான ஆதார் தரவுகள் விற்கப்படுகின்றன என்ற அறிக்கைகள் வெளிவந்தன. வங்கிகளின் தரவு மீறல்கள் வழக்கமான செய்திகளாகிவிட்டன.

டிஜிட்டல் உலகில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு அல்லது நிதித்துறையில் தொழில்நுட்ப மையமாக நாம் உருவாவதற்கு வலுவான பாதுகாப்பு மற்றும் அரசு நடவடிக்கை தேவை. மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.நிதியமைச்சகம் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா? இப்போது எங்களுக்கு பதில்கள் தேவை.” என்று கேள்வி எழுப்பி கோரிக்கை வைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like