விஜய் மாநாட்டு தேதியில் இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கா ? ஒன்னு விஜயகாந்த் பிறந்த நாள் இன்னொன்னு...?
நடிகராக இருந்து அரசியல் கட்சி தலைவராக உருமாறி இருக்கும் விஜய் முதன் முதலாக அரசியல் கட்சி மூலம் மக்களை சந்திக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாடு விஜயின் வட மாவட்ட செல்வாக்கை உயர்த்தி காட்டிய நிலையில், தென் மாவட்டத்திலும் தனது ரசிகர்கள் பலத்தை நிரூபிக்க விஜய் திட்டமிட்டார். அதற்கேற்றார் போல் கடந்த செயற்குழு கூட்டத்தில் மதுரையில் மாநில மாநாடு நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவின் நிலையில் திடீரென நேற்று இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது.
சிறிது நேரத்திலேயே ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். விழுப்புரம் மாநாட்டை போலவே மிக பிரம்மாண்டமாக, ஏன் அதைவிட அதிக பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பது விஜய்யின் திட்டம். மாநாட்டுக்கு 20 லட்சம் பேரை திரட்டி வர கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட மேடை அமைப்பு, விஜய் நடப்பதற்கு 500 மீட்டர் நீளம் ராம்ப் வாக், பார்க்கிங், உணவு தயாரிப்பு கூடம், மருத்துவ உதவிகள் என ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய நிர்வாகிகளுக்கு உற்றுவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் மாநாடு நடத்தும் தேதி குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை அவரது கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர். அன்றைய தினம் விஜயின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் லண்டன் வாழ் இலங்கைத் தமிழரான சங்கீதாவை விஜய் திருமணம் செய்து கொண்டார். அதைவிட முக்கியமாக அன்றைய தினம் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் என்பதும், மதுரை தான் விஜயகாந்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு உள்ளிட்ட படங்கள் கடுமையாக சொதப்பிய நிலையில், விஜயின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் கடும் மன உளைச்சலில் இருந்தார். அப்போது விஜயகாந்தை சந்தித்து தனது மகனின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சம்பளம் எதுவும் வாங்காமல் உடனடியாக அந்த படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். அந்தப் படம் தான் செந்தூரப்பாண்டி.
அதற்குப் பிறகு விஜயின் கேரியர் ஏறு முகமாகத்தான் இருந்தது. அதனால் விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதன் தொடர்ச்சியாக தான் அவரது மரணத்தின் போது கூட நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் தென் மாவட்டத்தில் தனது முதல் அரசியல் பயணத்தை விஜயகாந்தின் பிறந்தநாளில் அதுவும் அவரது சொந்த ஊரில் விஜய் தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் அவரது கட்சியினர். மாநாட்டில் விஜயகாந்த் குறித்து பேசினால் அது அவருக்கு மேலும் பிளஸ் பாயிண்டாக அமையும் என்கின்றனர்.