தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நல அரசா? மது ஆலை அதிபர்கள் நல அரசா?
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மது விற்பனையை ஒவ்வொரு மாதமும் 5% அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என்றும், மக்கள் நலன் காப்பதாகக் கூறிக் கொள்ளும் அரசு, மதுபான விற்பனையை அதிகரிக்க இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மது விற்பனையை அதிகரிப்பதற்காக விற்பனை அதிகாரிகள் மதுக்கடைகளுக்கு செல்ல வேண்டும் எனவும், மது விற்பனை இலக்கு எட்டப்படவில்லை என்றால் விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதிகாரிகளுக்கு வாய்மொழியாக டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறிய ராமதாஸ், விற்பனையை அதிகரிக்கவில்லை என்றால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நல அரசா? மது ஆலை அதிபர்கள் நல அரசா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், மது விற்பனை குறைந்தால், மக்கள் மது போதையிலிருந்து விடுபடுகிறார்களே? என்று நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியது அரசு தான் என்றும், ஆனால், மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக பதற்றம் அடைவது ஏன்? என்பது தான் புரியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “மதுபான வர்த்தகத்திற்கு அரசே இலக்கு நிர்ணயித்திருப்பது தலைகுனிய வேண்டிய செயல். மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் அரசை நடத்த வேண்டும் என்றால் அதனை விட அவமானம் வேறு எதுவும் இல்லை.
படிப்படியாக மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது பதவிக்காலம் முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த மாதங்களில் எவ்வளவு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது தொடர்பான கால அட்டவணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்” என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.