1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடா..? அமைச்சர் சக்கரபாணி பதில்..!

1

ஒவ்வொரு மாதமும் துவரம் பருப்பு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்துக்கான பருப்பு இன்னும் கொடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சனை சென்னையில் மட்டுமல்ல என்றும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பருப்பு விநியோகிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு ஒதுக்கீடு குடும்ப அட்டைதாரர்களுக்கு துரிதமாக தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 நவம்பர் 2024 (நேற்று) வரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மண்டலங்களை பொறுத்தவரை, மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு 14,75,019 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் சேர்த்து 87% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமன்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது.

தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை, எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like