உங்கள் பகுதியில் கொசு தொல்லை இருக்கா ? புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு, சிறப்பு முகாம்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கொசு அழிப்பு நடவடிக்கையும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுவீடாக சென்று கொசுக்கள் உற்பத்தியாவதற்கான இடங்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்தால் மக்கள் உதவி எண்களை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் 23 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மேலும் 3,542 தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமங்களில் ஒரு ஊராட்சி சுகாதார அதிகாரி, நகரங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அதிகாரி, மாநகராட்சி தெருக்களின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசுத் தொல்லை இருந்தால் 9444340496, 8754448477 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். உடல் உபாதைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.