பாமக அன்புமணி வசம் போகும் வாய்ப்பு உள்ளதா..?மூத்த நிர்வாகிகள் கலக்கம்!

பாமக தலைவர் அன்புமணி மூன்று நாள்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். அதன்படி, இன்று சென்னை சோழிங்கநல்லூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாமகவின் இளைய நிர்வாகிகள் அதிகளவில் வந்தனர். கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்ட செயலாளர்களில் 22 பேர் அன்புமணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்துள்ளனர்.
இதனால், மூத்த நிர்வாகிகள் ராமதாஸுக்கு எதிராக எப்படி நிற்பது என்று கலக்கத்தில் உள்ளனர். இதில், கே.பாலு, திலகபாமா உள்ளிட்டோரும் வந்துள்ளனர். பாமகவின் தலைவரும், நிறுவனரும் நான்தான் என்று ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது, நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பாமகவின் தலைவர் அன்புமணி என்று நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.
இந்த கூட்டத்தில் 23 மாவட்ட செயலாளர்களில் 22 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ள நிலையில், பாமக கட்சி அன்புமணி வசம் போக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். இதனிடையே, பாமக இளைஞர் அணி பதவியில் இருந்து விலகுவதாக முகுந்தன், ராமதாஸுக்கு கடிதம் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், பாமகவின் பொதுக்குழுதான் என்னை தேர்ந்தெடுத்தது. பாமகவின் தொண்டனாக உங்களுடன் சேர்ந்து இறங்குவேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது இலக்கு, நமக்குள் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது, புதிய இளம் உறுப்பினரை சேருங்கள், இந்த கூட்டம் பாமகவின் உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்கள் புதுப்பித்தல் தொடர்பான கூட்டம். எனவே,செய்தியாளர்களுக்கு தனியாக பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.