தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பா? நயினார் நாகேந்திரன் ரியாக்ஷன்..!

தமிழ்நாட்டில் பாஜக கால் ஊண்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு பாஜக மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறார். கடந்த முறை சென்னை வந்த போது அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அடுத்த முறை வரும் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நாளை இரவு அமித் ஷா தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் உடல் நலக்குறைவால் காமலானார். அவர் மறைவையொட்டி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சரஸ்வதி இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அமித் ஷாவின் தமிழகம் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அமித் ஷா ஜூன் 7ஆம் தேதி இரவு விமானம் மூலம் மதுரை வருகிறார். இரவு அங்கு தங்கும் அவர் காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
அதன்பின்னர் பாஜகவின் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை 3 மணியளவில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து அமித் ஷா உரையாற்ற உள்ளார். வேலம்மாள் திடலில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எதிர் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும். அவருக்கு அந்த எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும்” என்று கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி மோதல் நடைபெறும் நிலையில், அமித் ஷாவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று ராமதாஸை சந்தித்து பேசினார். இந்நிலையில் நாளை தமிழகம் வரும் அமித் ஷா பாமக விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.