தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறதா ? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்..!

வேலூரில் கட்டப்பட்டு வரும் அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது. அதனையொட்டி மின்சார துறை சம்பந்தமாக தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜூன்.19) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மின்வாரியத் துறையில் ஏற்பட்டிருந்த நஷ்டம் தற்பொழுது மிக அதிக அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு ரூ. 800 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும் ஆண்டுக்கு ரூ. 17,000 கோடி வரை மானியம் கிடைத்து வருகிறது.
அது தவிர நஷ்டத்தை ஈடு செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 17,000 கோடி வழங்கி வருகிறது. மின்சாரத் துறையில் வருவாயை பொருத்தவரை சுமார் ரூ.70 ஆயிரம் கோடியாக உள்ளது. தேவைக்கேற்ப மின்சார வாரிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளது. அதன்படி நிலுவையில் உள்ள ஒப்பந்தங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''மின் கட்டண உயர்வு குறித்து ஏற்கனவே முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. மின்துறை தற்போது ஒழுங்கு முறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் கொள்கை முடிவு என்னவோ அதை முதலமைச்சர் கூறுவார். அதை நாங்கள் செயல்படுத்துவோம்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''வேலூர் மண்டலத்தில் சுமார் 1,557 மெகாவாட் தேவை உள்ளது. இங்கு மூன்று துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க 800-க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்த டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுத்து வருகிறது. 650 டெக்னீஷியன்கள், 1,850 களப்பணியாளர்கள் எடுக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 14,800 மெகா வாட் உற்பத்தி திறன் உள்ளது. இதில் மிக விரைவில் உடன்குடியில் 1,320 மெகா வாட் தெர்மல் யூனிட்டை அடுத்த நான்கு மாதங்களில் முதலமைச்சர் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார். உடனடியாக 100 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. காற்றாலை, தண்ணீர், சோலார் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது. தேவைக்கேற்ப அனைத்தும் நிறைவேற்றப்படும்'' என இவ்வாறு கூறினார்.