ஏழை மக்கள் வயிற்றுப் பசியில் இருக்கும்போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா ?சீமான் கேள்வி..!

நீலகிரி மாவட்டம் உதகையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “நாட்டில் ஏழை மக்கள் வயிற்றுப் பசியில் இருக்கும்போது, நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா? நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை எனும்போது மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வும் தேவையில்லை. அப்படியே கட்டாயப்படுத்தப்பட்டால் நாட்டை ஆளும் தலைவர்களுக்கும் தேர்வு முறையை கட்டாயப்படுத்தினால் நாட்டில் அறிவுத்திறன் மேம்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் கிடையாது. தேவையற்ற செலவினங்களை உருவாக்கும். தேர்தலுக்கான நாடகம் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, எண்ணெய் நிறுவனங்களை தனியார் மையத்துக்கு வழங்குவதால்தான், பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆகையால், எண்ணெய் நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.
காடுகளை பாதுகாப்பதாக, வனப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதன் மூலம் வனப் பகுதிகளில் உள்ள கனிம வளங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அரசு வழிவகை செய்கிறது. காட்டை விட்டு வெளியே செல்ல மனமில்லாத பழங்குடியினரை தீவிரவாதிகள்போல் சித்தரிப்பதை தவிர்க்க வேண்டும். வளர்ந்த நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தாதபோது, நாமும் வாக்கு சீட்டு தேர்தல் முறைக்கு மாற வேண்டும். நான் உயர்ந்த லட்சியத்துடன் அரசியல் செய்கிறேன், என்னை இரண்டு லட்சுமிகளுடன் இணைத்து அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர் மற்ற அரசியல் கட்சியினர். தேர்தல் நேரத்தில் இதுபோன்று அவதூறு பரப்பவே சிலர் திட்டம் தீட்டி, இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் எனக் கூறினார்.