அமேதி தொகுதியில் களமிறங்குகிறாரா ராகுல் காந்தி..?
மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் இருந்து போட்டியிட பிரியங்கா காந்தி முடிவு செய்தால் அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை நல்குவர் என்றார் அவர்.
முன்னதாக உ.பி. காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய்க்கு வாரணாசியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜகவுக்கு எதிராக வாரணாசியில் தொடங்கிய அரசியல் போட்டி மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்துச் செல்லப்படும்,” என்று கூறினார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கு எதிராகப் போட்டியிட்டதற்காக உ.பி. காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் ராகுல் காந்தியின் சிப்பாய் என்பதால்தான் இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது எனது தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஒருவித அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கியுள்ளது. அதை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம்,” என்றார்.
அரசாங்கத்தில் ஆர்எஸ்எஸ் தலையீடு: ராகுல் சாடல்
அரசின் அனைத்துத் துறைகளையுமே ஆர்எஸ்எஸ்தான் தலையிட்டு நடத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
லடாக் பகுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை அவர் லடாக் சென்றார். ஆனால், அங்கு சென்றபின் தமது பயணத்தை அவர் மேலும் நான்கு நாள்களுக்கு நீட்டித்தார். அவர் லடாக்கில் உள்ள கார்கில் பகுதி இளைஞர்களைச் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக ராகுல் காந்தி அங்குள்ள லடாக் பகுதிக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு உரையாற்றிய ராகுல், “பாஜகவின் கொள்கை ஊற்றான ஆர்எஸ்எஸ்தான் நாட்டின் அனைத்துத் துறைகளையும் ஏற்று நடத்துகிறது. ஒவ்வொரு துறையிலும் ஆர்எஸ்எஸ் சார்புடையவர்கள் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றனர். மத்திய அமைச்சர்கள் பலரும் தங்கள் துறைகளில் ஆர்எஸ்எஸ் சார்புடைய அதிகாரிகள்தான் எல்லாவற்றையும் பரிந்துரைப்பதாகக் குமுறுகின்றனர்.
“இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது. அந்தச் சுதந்திரத்தின் தொகுப்புதான் இந்திய அரசியல் சாசனம். அரசியல் சாசனம் என்பது அரசின் சட்டதிட்டங்கள். அரசியல் சாசனத்தின் இலக்குக்கு உதவவே அதன் அடிப்படையில் துறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக இரண்டும், தங்கள் ஆள்களை முக்கியப் பொறுப்பில் அமர்த்தி எல்லாவற்றையும் சிதைக்கின்றன,” என்று கூறினார். பின்னர், லே பகுதியில் நடந்த காற்பந்தாட்டப் போட்டியை ராகுல் காந்தி கண்டு ரசித்தார்.