ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறாரா ?
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் மிகுந்த சிரத்தையுடன் மதிப்பீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் நேர்காணல்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மே 27 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படுபவர் வருகிற ஜூலை 1 முதல் அணியில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்வார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 வரை இருக்கும். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 60 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும். குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். அதேபோல இந்திய அணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அவர் விளையாடியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.