5 ஆண்டுகளில் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா ?
வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் மோடி தாக்கல் செய்துள்ளார். இதில் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை என பிரதமர் மோடி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள், ரொக்கமாக ரூ.52,920 வைத்துள்ளதாகவும், அவரின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தெரிவித்துள்ளார். 2019-ஐ விட இந்த தேர்தலில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 1978 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளார். 1983 ஆம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு 1.64 கோடியாக இருந்தது. 2019-ல் ரூ.2.51 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளது.